பிகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள மிதாப்பூர் (Mithapur) பேருந்து நிலையம் அருகே பள்ளிப்பேருந்து ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அந்த பேருந்துக்குள் ஐந்து குழந்தைகள் இருந்தனர்.இந்த நிலையில் பள்ளிப் பேருந்து திடீரென உருண்டோட ஆரம்பித்தது. ஓட்டுனர் இல்லாமல் பள்ளிப் பேருந்து ஏரியை நோக்கி செல்வதை பார்த்து பள்ளிக் குழந்தைகள் அழுதனர்.
பள்ளிக் குழந்தைகளின் கதறல் சப்தம் கேட்டு, அருகேயுள்ள புதருக்குள் இயற்கை உபாதைகளை கழிக்க சென்ற ஓட்டுனர் ஓடிவந்து பார்த்தார். அதற்குள் பள்ளி பேருந்து அருகிலிருந்த ஏரிக்கரையின் விளிம்புக்கே சென்று விட்டது. அதனை ஏரிக்கரை அருகேயுள்ள மின்கம்பம் தாங்கி பிடித்தது.
இதனால் பள்ளிப் பேருந்து ஏரிக்குள் விழவில்லை. அந்தரத்தில் தொங்கியது என்றே கூறலாம். பயம் காரணமாக பேருந்துக்குள் பள்ளி குழந்தைகள் கதறினார்கள். இந்த சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் அந்த பேருந்தை வெளியே கொண்டுவந்தனர். பேருந்துக்குள் இருந்த பள்ளி குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்து ஏரிக்குள் உருண்டோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.