பிரபல ரவுடி திருந்தி வாழ தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கமிஷ்னர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி ரவி பா.ஜ.க-வில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தலைமையக கூடுதல் கமிஷனரான லோகநாதனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் தண்டையார்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றேன் எனவும் எனக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர் எனவும் ரவி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே தான் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், தன்மீது பல பொய்யான வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் ரவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தான் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி குற்ற செயலில் ஈடுபடுகின்றனர். மேலும் தான் திருந்தி வாழ விரும்புவதாகவும் தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் ரவி குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பிரபல ரவுடி ரவியின் இந்த மனுவானது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.