ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி மணி என்கிற மணிகண்டன் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் காவல்துறையினர் ரவுடி மணியை பிடிக்க சென்றனர். அப்போது பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ பிரபு என்பவரை ரவுடி மணி பட்டா கத்தியால் தலையில் வெட்டினார். பின்னர் மீண்டும் வெட்ட முயன்ற போது தான் போலீசார் தற்காப்புக்காக இருமுறை சுட்டதில் ரவுடி மணி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த எஸ்.ஐ பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ரவுடி மணிகண்டனால் தாக்கப்பட்ட எஸ்.ஐ கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரவுடி மணி என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மணிகண்டன் கொல்லப்பட்ட இடம் மற்றும் அவரது உடல் பிரேத பரிசோதனை ஆகியவற்றை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்ய உள்ளார். அத்துடன் ரவுடி மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்ட வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றையும் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.