ஜாமீனில் வெளிவந்த இரண்டு ரவுடிகளை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் ராஜேஷ் மற்றும் ஜான்சன் என்ற 2 ரவுடிகள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 8-ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதனை அடுத்து இரண்டு பேரும் மெரினா காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஜான்சன் மற்றும் ராஜேஷ் ஆகிய 2 பேரும் வழக்கம் போல காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பூங்கா அருகில் சென்று கொண்டிருக்கும் போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இரண்டு பேரையும் விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த ஜான்சனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜேஷுக்கும், மற்றொரு ரவுடியான ஏழுமலை என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. மேலும் ராஜேஷுக்கு, ஏழுமலையின் மனைவியுடன் கள்ளதொடர்பு இருந்ததால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை ஏழுமலை வெட்டி கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.