பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமளாபுரம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவுடியான உதயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உதயகுமார் வெளியே சென்று விட்டு நள்ளிரவு நேரத்தில் மீண்டும் தனது வீட்டிற்கு காரில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் சில மர்ம நபர்கள் உதயகுமாரை பின்தொடர்ந்து சென்று காரை வழிமறித்து அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உதயகுமார் காரிலிருந்து இறங்கி ஓடியுள்ளார்.
ஆனாலும் அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் அவரை துரத்தி சென்று அரிவாளால் உதயகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக உதயகுமாரை கொலை செய்துள்ளனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.