ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது
ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது . இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள் (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார்.
மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) ரன்களும், பார்த்திவ் பட்டேல் 43 (24) ரன்களும் விளாசினர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 202 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் மொஹம்மது சமி, முருகன் அஷ்வின், ஆர். அஷ்வின், வில்ஜோன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 203 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், கே.எல் ராகுலும் களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய கிறிஸ் கெய்ல் 23 (10) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மயங் அகர்வாலும், கே.எல் ராகுலும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
அதன் பிறகு அகர்வால் 35 (21) ரன்களிலும், கே.எல் ராகுல் 42 (27) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து நிகோலஸ் பூரனும், டேவிட் மில்லரும் இணைந்தனர். டேவிட் மில்லர் பொறுமையாக விளையாட பூரன் அதிரடியாக விளையாடினார். கடைசிகட்டத்தில் பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால், மில்லர் 24 ரன்களிலும், பூரன் 28 பந்துகள் 46 ரன்களிலும் (5 சிக்ஸர், 1 பவுண்டரி) ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும், ஸ்டாய்னிஸ், மொயின் அலி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் கடைசியில் இருந்த பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.