பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், கே.எல் ராகுலும் களமிறங்கினர். கே.எல் ராகுல் 18 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார்.
அதை தொடர்ந்து மயங் அகர்வால் 15, சர்பராஸ் கான் 15, சாம் கர்ரன் 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி வரை ஆடிய கெய்ல் 64 பந்துகளில் 99* ரன்கள் (10 பவுண்டரி, 5 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 173 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக யூஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், மொயீன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன் பின் பார்த்திவ் பட்டேல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய டிவில்லியர்ஸும், கேப்டன் விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்பாக விளையாடினர்.
இந்த ஜோடி உறுதியுடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரை சதம் கடந்தார். அதன் பிறகு விராட் கோலி 67 ( 53) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் களமிறங்கினார். டிவில்லியர்ஸும், மார்கஸ் ஸ்டோய்னிசும் உறுதியுடன் போராடினர். இறுதியில் 19.2 ஓவரில் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 59* ரன்களுடனும் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் 28* (16) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் அணியில் முகமது சமி, கேப்டன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பெங்களூரு அணி இந்த வெற்றியின் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பெங்களூரு இதுவரை 7 போட்டிகள் விளையாடி 6 தோல்வியும், 1 வெற்றியும் பெற்றுள்ளது.