கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனிக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவமனை துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதேபோல, கொரோனா நோயாளிகளைக் கவனிக்கும் மற்ற துறையினரும் உள்ளனர். அவர்கள், காவல்துறை, சிவில் பாதுகாப்பு தொண்டர்கள், ஆசிரியர்கள் ஆவர். அவ்வாறு, கொரோனா நோயாளியால் காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், ஆசிரியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டாலோ, உயிரிழந்தாலோ அவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி ஆகும். நிலையில், டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.