ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் மெயின்புரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணி புரிந்ததாக கணக்கு காட்டி அதற்கு ஊதியமாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அம்பேத்கார் நகர், பிரயாக்ராஜ், அலிகார் போன்ற பகுதிகளில் செயல்படும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு அம்மாநில தொடக்கக்கல்வி துறை கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதில் முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியையின் பெயர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் இந்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது அந்த ஆசிரியை தலைமறைவாகி விட்டார். விசாரணையில் அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை வந்த தகவல் எந்த விதத்திலும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விஜய் ஆனந்த், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் முறைகேடு நடந்தது உண்மை என தெரிய வந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இதுபோல வேறு சில ஆசிரியர்களும் முறைகேடாக வேறு பள்ளிகளில் பணியாற்றுகிறார்களா என விசாரணையும் நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.