கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கொரோனா விவாகரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் இன்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் பங்கேற்றுள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இடதுசாரி கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், மனித நேயம் மக்கள் கட்சி தலைவர், திராவிட கழக கட்சி தலைவர் கி.வீரமணி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் பதிலளித்த ஸ்டாலின், ஆலோசனையின் முடிவில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த தொகை போதாது, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 5000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க கோரிக்கை வைத்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் தர வேண்டும் போன்ற தீர்மானங்களும் உள்ளடங்கும்.