Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் விதிகளை மீறினால் ரூ.100 அபராதம்; 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிப்பு!

சென்னையில் விதிகளை மீறினால் ரூ.100 அபராதம்; 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – 77, கோடம்பாக்கம் – 97, அண்ணா நகர் – 86 என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணியாக சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மேலும் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |