சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பல்வேறு நாடுகளிலிருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளைச் சோதனையிடும் பணியில் சுங்கத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ராவுத்தர் (43), கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (26), புதுக்கோட்டையைச் சேர்ந்த உதயகுமார் (40) ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். இதில் எந்தப் பொருளும் சிக்கவில்லை.
சந்தேகத்தின்பேரில் அவர்களைத் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். மூவரிடமிருந்து ரூ. 32 லட்சம் மதிப்பிலான 817 கிராம் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது. கொழும்பிலிருந்து இந்தத் தங்கம் யாருக்காக கடத்திவரப்பட்டது, இதன் பின்னணியில் யார் உள்ளனர் உள்பட பல்வேறு கோணங்களில் அலுவலர்கள் விசாரித்துவருகின்றனர்.