தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சுமார் 1778 தொழிற்சாலைகளை சேர்ந்த 21,770 பேருக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக பழனிசாமி அறிவித்துள்ளார். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.2.177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது.
இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, உயிரிழப்புகள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சேலம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்கள் வளவதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுவருகிறது. ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000, கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி என பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், ஈட்டுறுதி திட்டத்தின் (ஈஎஸ்ஐ)கீழ் பதிவு செய்துள்ள தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.