ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வெளியே வருவோரின் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், இதுவரை வசூலித்த அபராதம் ரூ.2.68 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செயயப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 17 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார்.
கொரோனா பாதிப்பு நாட்டில் குறையாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு 30வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதகாலம் முடிய போகிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தேவைகள் இன்றி அனாவசியமாக வெளியே வருவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதுவரை நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 21,393ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 681ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.