Categories
மாநில செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி..!

ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இன்று உயிரிழந்த 3 பேரில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவார். நேற்று இதே மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் கர்னல் உள்பட ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று மதியம், பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹத்துவாரா தாக்குதலில் நெல்லையை சேர்ந்த வீரர் சந்திர சேகர் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். சந்திரசேகர் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், மரணம் அடைந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |