சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் லலிதாபுரம், காமராஜ் காலனி, கருமாங்குளம், டாக்டர் தாஸ் காலனி, வன்னியபுரம் மற்றும் ஆன்டிமானிய தோட்டம் பகுதிகளில் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட திட்டப் பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1970-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் குடிசை பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கி 50 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மறுக்கட்டுமான காலங்களில் வெளியே வாடகையில் தங்குபவர்களுக்கு கடந்த காலங்களில் 8000 வழங்கப்பட்டு வந்தது.
இந்த தொகையை தற்போது முதல்வர் ஸ்டாலின் 24,000 ஆக உயர்த்தியுள்ளார். சென்னையில் 24,538 அடுக்குமாடி குடியிருப்புகள் வாழத் தகுதியற்றவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முதல்வர் ஸ்டாரின் அவர்கள் தகுதியற்ற வீடுகளை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 15,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட இருக்கிறது. இதில் 10,000 பேருக்கு கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது.இனிவரும் காலங்களில் 27, 538 வீடுகளும் இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் தற்போது கட்டித் தரப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் 50 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து இருக்கும் என்று கூறினார்.