நெய்வேலி என்எல்சி-யில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடத்திவந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். ஊரடங்கு காரணமாக மின் தேவை குறைந்ததால் என்எல்சி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது. பொது முடக்கத்தில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், என்எல்சி-யில் மின்னுற்பத்தி அதிகரிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி மாலை 5 மணியளவில் 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு நிரந்தர தொழிலாளி மற்றும் 7 ஒப்பந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி நிரந்தர பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் நேற்று கொளிருப்பு கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். இதன் காரணமாக உரிய இழப்பீடு வழங்கக்கோரி 2ம் அனல்மின் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், உறவினர்களுடன் அனல்மின் நிலைய ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் எந்தவித உடன்படும் எட்டாத நிலையில் மீண்டும் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதாக என்எல்சி உறுதி அளித்தது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் பணமும் தருவதாக உறுதியளித்தது. என்எல்சி- நிர்வாகத்தின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.