சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்த நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் இம்மாத இறுதிவரை (மார்ச் 31) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. முக்கியமாக மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கட்டுமான பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணமாக ரூ.3,000 வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.
இந்தத் தொகை வரும் திங்கள்கிழமை அன்று கட்டுமான பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இதற்காகப் பஞ்சாப் அரசு ரூ.96 கோடியை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.