திருவள்ளூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண ,மோசடி செய்த கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரம்யா. பட்டதாரிகளான இவர்கள் இருவரும் அரசு வேலையில் சேர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அதற்கான படிப்புகளைப் படித்து வந்தனர். இதையடுத்து இருவரும் அரசு வேலைக்கு ஆசைப்படுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள எண்ணி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி ராஜி ஆகியோர் தங்களுக்கு ஏராளமான அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் சுலபமாக அரசு வேலை வாங்கித் தரமுடியும் என்றும் கூறி அதற்கு 4 லட்சம் பணம் கொடுத்தால் உடனடியாக வேலை வாங்கித் தருகிறோம் என்று உறுதியளித்துள்ளனர்.
இதனை நம்பி கடந்த 2018 ஆம் ஆண்டில் ரூபாய் 4 லட்சம் பணத்தை தம்பதியினர் கொடுத்துள்ளனர். இதையடுத்து ரம்யா என்பவருக்கு கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் சுகாதார அலுவலகத்திலும் கார்த்திக் என்பவருக்கு பொதுப்பணித் துறையிலும் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் கூறியபடி வேலை வாங்கித் தராமல் இரண்டு ஆண்டுகள் காலம் தாழ்த்தியதையடுத்து, அவர்களை தொடர்பு கொள்கையில் சரியான பதில் அளிக்காமல் கணவன்- மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரம்யா கார்த்திக் திருவள்ளூர் மாவட்ட தலைமை காவலர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் நேற்று மணிகண்டன் அவரது மனைவி ராஜி இருவரையும் திருப்பூர் அருகே கைது செய்து பின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் குற்றம் நிரூபிக்கப்பட இருவரும் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.