காரைக்குடி அருகே வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி 40 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் மீது விக்னேஷ் என்பவர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
காரைக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தேவகோட்டை மங்கல குடியைச் சேர்ந்த முகவர் அபூபக்கர் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்துள்ளார். 30க்கும் மேற்பட்டோர்க்கு வேலை வாங்கிக் கொடுத்ததால் அவரை முழுவதுமாக நம்பிய விக்னேஷ் மேலும் 40க்கும் மேற்பட்டோரிடம்பணம் வசூலித்து ரூ40 லட்சம் ரூபாய் அபூபக்கரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் அபூபக்கர் பணத்துடன் ஊரைவிட்டு மாயமானதால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் பல இடங்களிலும் தேடி பின்டெல்லியில் அவர் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். அங்கு சென்று அவரை பிடித்த விக்னேஷ் அவரிடம் பணத்தைக் கேட்க மீண்டும் வாக்குறுதி அளித்து நம்பவைத்து அபூபக்கர் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் விக்னேஷ் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.பின் அவர்கள் தமிழக புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். இதையடுத்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்க செய்வதறியாது திகைத்து விக்னேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். காரைக்குடி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விக்னேஷின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.