சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக எஸ்.எம் சுப்பிரமணியன் இருக்கிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர் தான் யார் என்பதை காட்டிக் கொள்ளாததோடு விஐபி வரிசையில் நிற்காமல் சாதாரண பக்தர்கள் செல்லும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கியுள்ளார். இவர் தான் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு சேர்த்து ரூபாய் 150 கொடுத்து நுழைவு வாயில் கட்டணத்தை வாங்கியுள்ளார்.
அவருக்கு இரண்டு 50 ரூபாய் டிக்கெட்டும், ஒரு 5 ரூபாய் டிக்கெட்டும் வழங்கப்பட்டுள்ளது. உடனே நீதிபதி தான் கொடுத்த 45 ரூபாய்க்கான உரிய ரசீதை தருமாறு டிக்கெட் கவுண்டரில் இருந்தவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பதில் ஏதும் கூறாததால் கோவில் செயல் அலுவலரின் செல்போன் நம்பரை நீதிபதி கேட்டுள்ளார். ஆனால் செயல் அலுவலரின் செல்போன் நம்பரை அவர் தர மறுத்ததோடு நீதிபதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது நீதிபதியின் மனைவி முதல்வரே இவர் கேட்கும் போது செல்போன் நம்பரை கொடுக்கிறார். நீங்கள் செயல் அலுவலரின் செல்போன் நம்பரை கொடுக்க மாட்டீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு கோவிலில் இருந்தவர்கள் முதல்வர் வேண்டுமானால் தரலாம். ஆனால் நாங்கள் தரமாட்டோம் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிபதியை வலுக்கட்டாயமாக கோவிலில் இருந்து வெளியேற்றவும் முயற்சி செய்துள்ளனர்.
அந்த சமயத்தில் காவல்துறையினர் அங்கு வர நீதிபதி என்ற உண்மை கோவில் நிர்வாகத்தினருக்கு தெரியவர அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வடபழனி கோவிலின் செயல் அலுவலர் அரசு தரப்பு வழக்கறிஞருடன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது நீதிபதி வடபழனி முருகன் கோவிலில் இவ்வளவு முறைகேடுகள் நடக்கும்போது இதைவிட புகழ்பெற்ற கோவில்களில் எத்தனை முறைகேடுகள் நடக்கும் என்று வருத்தம் தெரிவித்தார்.
அதோடு இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை மற்றும் செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியதோடு அறநிலையத்துறையின் மீதுள்ள நம்பிக்கையால் வழக்கு ஏதும் பதியாமல் விட்டுவிட்டார். மேலும் நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோவில் ஊழியரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு செயல் அலுவலரின் நம்பரை பக்தர்களுக்கு தெரியும் படி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.