உண்மைக்குப் புறம்பாக அழகுசாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் என்பதற்கு புதிய சட்ட திட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டத்திருத்தத்தின் தேவை என்ன ? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் :
எங்களுடைய அழகுசாதன பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துங்கள் பயன்படுத்தினால் ஒரே மாதத்தில் உங்கள் முகம் பொலிவு பெறும். இந்த மாத்திரையை தொடர்ந்து உண்டால் அஜீரணக் கோளாறு வராது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால் தலைமுடி உதிராது, நரை முடி கருப்பாகும். உங்கள் குழந்தை வேகமாக வளர வேண்டுமா ? இந்த பானத்தை கொடுங்கள். இதுபோன்ற விளம்பரங்களை நாம் கடந்து செல்லாத நாட்களே இல்லை.
இந்த விளம்பரங்களில் சொல்லப்படுவது உண்மையா ? அல்லது கம்பெனிகள் தங்களின் பொருட்களை விற்பனை செய்ய மேற்கொள்ளும் யுக்தியா ? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும். இது போன்ற மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் , விளம்பரங்களை கட்டுப்படுத்த 1954 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் தான் மருந்து விளம்பரங்கள் கட்டுப்பாட்டு சட்டம். காலத்திற்கு ஏற்ப சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டத்தின்படி முதல் முறை குற்றத்திற்கு அபராதம் ஏதும் இன்றி 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். சட்டங்கள் கடுமையாக இல்லாததால் தான் அதிக அளவில் போலி விளம்பரங்கள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத் திருத்த வரைவு படி முதல் முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 10 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அது தொடர்ந்தால் அந்த அபராதத் தொகை 50 லட்சம் ஆகவும் , சிறை தண்டனை 5 ஆண்டாகவும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. சில இடங்களில் தங்களின் மரபணு சார்ந்த மருந்துகளால் அரிய வகை நோய்கள் குணப் படுத்த படும் என்று சில போலிகள் உலாவு வருகின்றன.இது மனிதர்களின் இயற்கையான உடல் சுழற்சியைபாதிக்கக்கூடும்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்த வரைவில் , அதிசயம் , அற்புதம் என ஒளிவடிவில் வீடியோவாக அல்லது அட்டைப்படம் , சுவரொட்டி , துண்டு பிரசுரங்களை எந்த வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலத்திற்கு ஏற்ப சட்டத்தை தகவமைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் இந்த சட்டத்திருத்தம் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களை கேட்ட பின்பு விரைவில் சட்டமாக உள்ளது. இதன் மூலம் விளம்பரத்திற்காக கற்பனை நீக்கி மிஞ்சிய செய்திகளை சொல்லாமல் உண்மையை உரக்கச் சொல்லி பொருட்கள் விற்கப்படும் என நம்பலாம்.