ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசின் ஊழலையும், நிர்வாக தோல்விகளையும் திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதாக ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட புகாரை தூசிதட்டி எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. சென்னை அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக சர்ச்சையை எழுப்பியது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி உரிய விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் இந்த அராஜக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதே புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட இரு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் நீதித்துறையை கூட மதிக்காமல் அலட்சியம் செய்து, கைது வெறியாட்டத்தை பழனிசாமி நடத்தியிருப்பது வெட்கக்கேடானது ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மீது ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு பல்வேறு ஊழல் புகாரை அளித்துள்ளார்.
நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ள கொரோனா கால டெண்டர் ஊழல் மீது விரிவான புகாரை ஆதாரங்களுடன் கொடுத்துள்ளார். கொரோனா கால ஊழல், கொரோனா தோல்வி ஆகியவற்றை மூடி மறைக்க வேறு வழியில்லாமல் குரோத எண்ணத்துடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் சமத்துவ சமூக நீதிக்காகவும் காலம் காலமாக அயராத பாடுபட்டு வரும் முன்னேற்ற கழகத்தின் சீர்மிகு பணிகளை இதுபோன்ற சிறு பிள்ளைத் தனமான அரைவேக்காட்டு அதிகார துஷ்ப்ரயோகம் மூலம் எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவரை தொலைதூரத்தில் இருந்து இயக்கும் ரிங் மாஸ்டர்களோ களங்கம் கற்பித்து விடவோ, திசை திருப்பி விடவோ நிச்சயம் முடியாது என தெரிவித்துள்ளார்.