எம்ஜிஆர் பிறந்த நாள் அறிக்கை பிரச்சனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததற்கு ஆர் எஸ் பாரதி பதில் கொடுத்திருக்கிறார்.
ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டிருந்ததில் கலைஞர், திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்த மந்திரகுமாரி மற்றும் மருதநாட்டு இளவரசி போன்ற திரைப்படங்கள் மூலமாகத்தான் எம்ஜிஆர் தனக்கென்று தனியிடத்தை பிடித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் என்ன குற்றத்தைக் ஜெயக்குமார் கண்டுபிடித்தார். இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் தான் எம்ஜிஆர் திரையுலகில் பிரபலமடைந்தார் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால் வரலாற்றை அறியாத ஜெயக்குமார், இந்த திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பு மர்மயோகி, சர்வாதிகாரி, என் தங்கை ஆகிய வெற்றிப் படங்களின் மூலமாக திரையுலகில் எம்ஜிஆர் பிரபலமானார் என்று பச்சையாக பொய் கூறுகிறார்.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் பற்றி ஜெயக்குமார் தெரிவித்திருக்கும் தகவல்கள் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய், எம்ஜிஆர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட வரலாற்றை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயரிட்டு, அதனை திறந்து வைத்தது கலைஞர் என்பதற்கு ஆதாரம் அந்த பல்கலைக்கழகத்தில் திறப்புவிழா கல்வெட்டில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.