நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரலாறு காணாத மழை பெய்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் அவலாஞ்சி பகுதியில் 92 செ. மீ மழை பதிவானது. இந்த கனமழையால் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது.
இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி உதகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த ஆண்டு பெய்த மழைக்கு சுமார் 700 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதனை சரி செய்வதற்கு வெறும் 78 கோடி ரூபாயை மட்டுமே தமிழ்நாடு அரசு ஒதுக்கியதாகவும் வேதனை தெரிவித்தார்.
மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் நிதியிலிருந்து 5 கோடி ரூபாயும், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் என மொத்தம் 10 கோடி ரூபாய் நிதி நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கபட்டுள்ளதாகவும், ஆனால் அந்த நிதியை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், வீடு இழந்தோருக்கு வீடுகள் கூட கட்டித் தரபடாமல் உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், சீரமைப்பு பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.