RSS தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலையை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திடவும் அவர் பயணிக்கும் இடங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்புப் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பலரும் இதற்கு, மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில் மதுரை மாநகராட்சி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வில்லை. Z ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர் என்பதால் வழக்கமான முன்னேற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.