செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும், முரண்பாடுகளுக்கும், சாதிய பாகுபாடுகளுக்கும், பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை கருத்தியல் ”மனுஸ்மிருதி” தான். மனுஸ்மிருதியை தன்னுடைய அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிற ”ஆர்.எஸ்.எஸ்” மக்கள் இயக்கம் போல் தன்னை காட்டிக் கொள்வதற்காக முயற்சிக்கிறது.
உள்ளபடி ஆர்எஸ்எஸ் இயக்கம் பிற இயக்கங்களை போல ஒரு சராசரியான மக்கள் இயக்கம் இல்லை. அது அடிப்படையில் மதவாத அரசியலை, வெறுப்பு அரசியலை, வர்ண பாகுபாடு அரசியலை கொண்டிருக்கிறது. காந்தியடிகளை கொன்ற இயக்கம், காமராஜரை கொல்ல முயன்ற இயக்கம். பாபர் மசூதியை இடித்த இயக்கம், குஜராத் படுகொலையை நடத்திய இயக்கம்.
தொடர்ந்து லவ்-ஜிகாத் என்றும், கர்வாப்சி என்றும், கோழி கௌவ் பசு புனிதம் என்றும் பல்வேறு பெயர்களில் முஸ்லிம் வெறுப்பையும், கிறிஸ்தவ வெறுப்பையும் இந்த மண்ணில் விதைக்கிற இயக்கம். பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணிகள் நடத்துவதில் எமக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்எஸ்எஸ்-யின் அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் போது, பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ”ஆர்.எஸ்.எஸ்” சார்பில் பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ?
”ஆர்.எஸ்.எஸ்” பின்னால் இருந்து இயங்குகின்ற ஒரு இயக்கம். ஆகவே பிஜேபி இந்த 50 இடங்களில் பேரணி நடத்தி இருந்தால், விசிகவோ மற்ற இயக்கங்களோ எதிர்ப்பு தெரிவித்து இருக்க போவதில்லை. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தான், அச்சத்தை ஏற்படுத்துகிறது தெரிவித்தார்.