திருப்பூரை அடுத்த உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் 27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட பல்வேறு கட்சியினர் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உடுமலையை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்ற 4 மாத காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி 27 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் குழாய்கள், தெருவிளக்குகள் வாங்கியதிலும், குடிநீர் குழாய்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதும் மாவட்ட ஆட்சியர் அமைத்த சிறப்பு தணிக்கை குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊராட்சி மன்ற செயலாளர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரியும் முறைகேட்டிற்கு துணை போன வட்டார வளர்ச்சி துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் உடுமலை ஒன்றிய ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.