அமெரிக்காவில் குத்துச்சண்டை போட்டி நடந்த சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தியால் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
அமெரிக்க நாட்டில் தற்போது துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி டெக்சாஸ் மாகாணத்தின் தொடக்கப்பள்ளியில் 18 வயதுடைய நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் அந்த பள்ளியை சேர்ந்த 19 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த பார்வையாளர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். அரங்கத்திற்குள் அதிக சத்தம் கேட்டதால் சிலர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடப்பதாக சத்தமிட்டுள்ளனர்.
இதனை கேட்ட மற்ற பார்வையாளர்களும் பதறியடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்கள். இதில், சிலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, அரங்கத்திற்குள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அது வதந்தி தான் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.