உக்ரைன் விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இஸ்லாமிய தேச தீவிரவாதிகளுக்கும், ரஷ்யா படையினருக்கும் வேறுபாடு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் காணொளி மூலம் பேசியுள்ளார். அதில் “இந்தக் கூட்டத்தில் நான் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக பேச வந்திருக்கிறேன். உக்ரைனில் உள்ள அப்பாவி பொதுமக்களை ரஷ்யா படுகொலை செய்துள்ளனர். மேலும் பெண்களை அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.
இதனை தொடர்ந்து புச்சா நகரில் ரஷ்ய படையினர் செய்யாத வன்முறை குற்றங்களே இல்லை. பொதுமக்களை வீடுகளுக்குள் புகுந்தும், தெருக்களில் வைத்தும் ரஷ்ய படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் சுவற்றின் முன்னிலையில் பொதுமக்களை நிறுத்தி பீரங்கிகளால் ரஷ்ய படைகள் நசுக்கிக் கொண்டு உள்ளனர். இந்த கொடூர செயல்கள் ரஷ்ய படையினரின் சந்தோஷத்திற்காக மேற்கொள்ளப்பட்டது. இவர்களின் இந்த செயல்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயலுக்கும் கொஞ்சமும் குறைந்ததல்ல.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் தனது தவறான பிரச்சாரத்தின் மூலம் உக்ரைன் மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள நாடுகளின் மக்கள் மீதும் வெறுப்பு விதையை விதைக்கிறார். மேலும் புச்சா நகரம் மட்டுமின்றி ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நகரங்களிலும் இதுபோன்ற கொடூர செயல்கள் நடத்தி இருப்பார்கள். அதனை உலகம் இனிதான் தெரிந்துக் கொள்ளும். இது போன்ற கொடூர செயல்களுக்கு ரஷ்யா பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் இந்த கொடூர செயல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரஷ்யா கூறுகையில், “ஆக்கிரமிப்பு பகுதிகளில் பொதுமக்களை நாங்கள் துன்புறுத்தவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான உலகின் கருத்தை திசை திருப்புவதற்காக மேற்கத்திய நாடுகளின் இறக்கத்தை உண்டாக்கவும், மேலும் உதவிகளை பெறவும் பொதுமக்கள் படுகொலையை உக்ரைன் போலியாக கொடுத்துள்ளதாக” கூறியுள்ளது.
இதற்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வானொலி மூலம் பேசியபோது ரஷ்ய படையினர் மீது படுகொலை குற்றச்சாட்டை மீண்டும் ஆணித்தரமாக சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.