கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அணைகளின் கொள்ளளவு எட்டிய நிலையில் கேரளாவில் உள்ள 10 பெரிய அணைகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இடுக்கி, இடமலையார், பம்பா மற்றும் காக்கி ஆகிய 4 அணைகளில் உள்ள மாநிலத்தின் 78 அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அதனைப்போலவே கேரளாவின் இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியில் சிறுதோணி அணை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை எர்ணாகுளத்தில் உள்ள இடமலையார் அணை மற்றும் பத்தனம்திட்டாவில் உள்ள பம்பா அணை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் மீன் பிடிக்க வேண்டாம் என்று மாநில காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆனால் தென்மலை அணையில் இளைஞர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஓடும் ஆற்றில் குதித்து மீன்பிடித்து வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அணையில் குதித்து மக்கள் அரை கிலோ மீட்டர் வரை சென்று டேமில் மீனை பிடித்து அதனை விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் 15 கிலோ முதல் 20 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சுவை மிகுந்த மீனின் ஆரம்ப விலை ரூ.2000 என்று விற்கப்படுகிறது. இளைஞர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த மாநில காவல்துறை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் எச்சரித்துள்ளது.