ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்ட இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக அறிவித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்திய அரசு, தங்கள் மக்களை அந்நாட்டிலிருந்து மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களை உக்ரைன் நாட்டிலிருந்து மீட்கும் பணிகளுக்கு ருமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் உதவி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் கடந்த புதன்கிழமை அன்று தொலைபேசியில் பேசினார். அப்போது, இந்திய மாணவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு உதவுமாறு கேட்டிருக்கிறார். ரஷ்ய அரசும், இந்திய மக்களை மீட்கும் பணிக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.
ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர், கர்னல் ஜெனரல் மிகெயில் மிசின்ட்சேவ் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் கார்கிவ் மற்றும் சுமி போன்ற நகர்களில் மாட்டிக்கொண்ட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பிற நாட்டு மக்களை மீட்க மொத்தமாக 130 பேருந்துகள் ரஷ்யாவின் பெல்கோராட் பிராந்தியத்தில் தயாராக உள்ளன.
அந்த பேருந்துகளில், அழைத்து செல்லப்படும் மக்கள் பெல்கோராட் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைசாவடிகளில் தங்க வைக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளுடன் கூடிய நடமாடும் கிளினிக் வசதிகள் அளிக்கப்படும். அதன்பின்பு, அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.