இரு நாட்டு அதிபர்கள் நாளை ஆலோசனையில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது இராணுவ படைகளை குவித்துள்ளது. இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் காணொளி மூலமாக நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டமானது உக்ரைனிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் பதற்றத்தை தந்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கூறியதில் “பல்வேறு துறைகள் சார்ந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு, உறவு குறித்து அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. ஒருவேளை உக்ரைன் மேல் ரஷ்யா படையெடுத்தால் அதன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அதிபர் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதிலும் சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு பதிலடி தரும் வகையில் சீனாவும் ரஷ்யாவும் தங்களது வெளியுறவுக் கொள்கைகளில் சமீபகாலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே சீனாவின் உள்நாட்டு கொள்கைகள் காரணமாக அமெரிக்கா அதன் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.