ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் போரை நீடிக்க சிறை கைதிகளை களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, சிறை கைதிகளை உக்ரைன் போரில் களமிறக்க தீர்மானித்திருக்கிறது. அதன்படி அவர்கள் ஆறு மாதங்கள் அங்கு போரிடுவார்கள். அதன் பிறகு நாட்டிற்கு திரும்பி வந்தால் அவர்களின் தண்டனை காலம் ரத்தாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரஷ்ய நாட்டின் செயின் பீட்டர்ஸ்பெர்க்கில் இருக்கும் கைதிகளை தேர்ந்தெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 3000 பவுண்டுகள் வரை வெகுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். போரில், இந்த கைதிகள் முன் வரிசையில் களம் இறங்குவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல், போரில் இந்த கைதிகளில் யாராவது உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்தாருக்கு 70 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடுமையான குற்றங்களால் 20 வருடங்களுக்கு மேல் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடையாது.
எனினும், அந்த கைதிகளின் குடும்பத்தார் இந்த திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு மாதங்கள் கழித்தும் தொடர்ந்து போரிட விரும்பும் கைதிகள் ரஷ்யப்படையில் நீடிக்கலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.