ரஷ்ய அரசு உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய மக்கள் வெளியேறுவதற்காக தற்காலிகமாக போரை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல ராணுவ தளங்களை அழித்ததோடு மட்டுமன்றி, மருத்துவமனைகள், குடியிருப்புகள் என்று அனைத்து இடங்களிலும் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் உக்ரைன் மக்கள் அங்கு மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார்கள். இதில் சுமி என்னும் நகரத்தில் 700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்திய அரசு, உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு நாடுகளிடமும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டது.
எனவே, ரஷ்யா உக்ரைனில் மாட்டிக்கொண்ட இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும், அவர்களுக்கு மருந்து, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்திக் கொள்வதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மீண்டும் காலை 10 மணியிலிருந்து, போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்திருக்கிறது.