ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். உக்ரைனை கைப்பற்றுவது எங்களின் நோக்கமல்ல, எங்களைப் பாதுகாத்துக்கொள்ள இதுபோன்ற நடவடிக்கை அவசியமானது என்று அவர் விளக்கமளித்துள்ளார். அதே நேரம் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று வரும் போரில் பிற நாட்டினர் யாரேனும் தலையிட்டால், அவர்கள் இதுவரையிலும் காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் 2-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர் உதவிகேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முகமது யாசிக், உக்ரைனின் புல்வதா மாகாணத்தில் 4ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். ரஷ்ய தாக்குதலை அடுத்து, நாடு திரும்ப உதவி கோரி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் உட்பட இந்திய மாணவர்கள் பலரும் செலவுக்குப் பணம் இன்றி தவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.