உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் 21-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் பெரிய நகர்களில் ஒன்றைக்கூட கைப்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். எனவே, தங்கள் உயிரை காத்துக் கொள்ள மக்கள் லட்சக்கணக்கில் அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள்.
ரஷ்யாவின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. எனினும் ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைன் நாட்டின் படைகளும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ரஷ்யப் படைகளால், உக்ரைன் நாட்டில் உள்ள 10 பெரிய நகர்களில் ஒன்றைக்கூட கைப்பற்ற முடியவில்லை.
சமீப நாட்களாக கீவ் நகரத்தில் கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு தொடர்ந்து ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடக்கின்றன. அந்நகரை ரஷ்யப் படைகள் 3 பகுதிகளிலிருந்தும் சுற்றிவளைத்திருக்கின்றன. இதனால் தாக்குதல்கள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அந்நகரில் 35 மணி நேரங்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் பதுங்கு குழிகளிலும், கட்டிடங்களின் அடி தளங்களிலும் மறைந்திருக்கிறார்கள்.