பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள பிரித்தானியா தூதரகத்தில் உள்ளூர் ஊழியராக பணி புரிந்தவர் 52 வயதான டேவிட் எஸ் என்பவர் ஆவார். இவர் ரஷ்யா உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பணத்திற்காக செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி வாரண்ட் வழங்கப்பட்டதை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று Brandenburg மாநிலத்தில் உள்ள Potsdam நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது பணியிடம் மற்றும் குடியிருப்பில் ஆய்வு நடத்தியதை அடுத்து நேற்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜெர்மனியின் தலைமை கூட்டாட்சி வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “டேவிட் தனது தொழில் செயல் முறைகளில் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது ஆவணங்களை ரஷ்ய உளவுத்துறை பிரதிநிதியிடம் ஒப்படைத்துள்ளார்” என்று கூறியுள்ளனர். மேலும் சில வருடங்களாக ரஷ்யாவிற்கு உளவு பார்த்த பலரை ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் நேட்டோ கூட்டாளி மக்களை பிடிப்பது மிகவும் கடினமானது. இது குறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெயிகோ மாஸ் கூறியதில் “நெருங்கிய தொடர்புடையவராகவே இருப்பினும் உளவுத்துறை நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பெர்லின் இந்த வழக்கை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.