உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மக்கள் தங்கள் ஆடைகளில் கட்டாயம் வெள்ளை ரிப்பன்கள் அணிய வேண்டும் என்று ரஷ்யப் படைகள் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்ய படையினர், உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மக்கள் தங்கள் ஆடைகளில் வெள்ளை நிற ரிப்பன்களை கட்டாயம் அணிய வேண்டும் என்று எச்சரித்திருக்கிறார்கள். அவ்வாறு அணியாத மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகள் அணியக்கூடிய வெள்ளை ரிப்பன்களை மரியுபோல் நகரத்தை சேர்ந்த மக்களும் அணியவேண்டும் என்று வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதுபற்றி, மரியுபோல் நகரத்தின் மேயர் தெரிவித்திருப்பதாவது, அப்பாவி பொதுமக்களிடம் அவர்கள் வேண்டுகோள் விடுக்கவில்லை. வெள்ளை ரிப்பன்களை அணிய வேண்டும் என்று நேரடியாக எச்சரிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டு மக்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்குவதுதான் அவர்களின் இலக்கு என்று கூறியவர், மரியுபோல் நகரை அவர்கள் கொலைக்களமாக மாற்றியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பதாவது, ரஷ்ய படைகள் கைப்பற்றிய மரியுபோல் நகரின் நிலை தற்போது பரிதாபமாக இருக்கிறது. ஒரு லட்சம் மக்கள் தற்போது வெளியேற முடியாத நிலையில் இருக்கிறார்கள். மேலும், நூற்றுக்கணக்கான மக்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.