ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் இருக்கும் மரியுபோல் நகரத்தின், மிகப்பெரிய உருக்கு ஆலை அடைக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நான்கு வாரங்களுக்கும் அதிகமாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ஆக்கிரமித்துள்ள ரஷ்யா, தலைநகர் கீவ், கார்கிவ் மற்றும் மரியுபோல் போன்ற நகர்களை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் மறைந்திருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் கூறியிருக்கிறார்.
மேலும் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தை ரஷ்ய படையினர் அசோவ் கடலிலிருந்து துண்டித்து விட்டனர். இந்நிலையில் அந்நகரில் இருக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிதான அசோவ் இரும்பு உருக்கு ஆலையில் ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளன.
இதில் அந்த ஆலையில் அதிகளவில் சேதம் ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் கூறியிருக்கிறார். எனவே அந்த அலை அடைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் பொருளாதார பேரிழப்பு மற்றும் சுற்றுச்சூழல் அழிவு உண்டாகியிருப்பதாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.