உக்ரைன் நாட்டில் இருக்கும் விலங்குகள் பூங்காவில், ஒட்டகம், கங்காரு போன்ற விலங்குகளை கொன்று அவற்றை உண்டு ரஷ்ய வீரர்கள் உயிர் வாழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா கைப்பற்றிய தங்களின் பகுதிகளை உக்ரைன் படையினர் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் வெடித்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருக்கும் டோனட்ஸ் நகரத்தை மீட்பதற்காக உக்ரைன் படை போராடி வருகிறது. அதன்படி, ரஷ்யா கைப்பற்றி இருந்த டோனட்ஸ் மாகாணத்தின் யப்பில் என்னும் கிராமத்தை சமீபத்தில் உக்ரைன் மீட்டு விட்டது. அந்த கிராமத்தில் விலங்குகள் பூங்கா இருக்கிறது.
ரஷ்யப்படையின் அதனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்பாக, அங்கு கங்காரு, காட்டெருமை, நரிகள், பன்றிகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற விலங்குகளும் பறவைகளும் இருந்திருக்கிறது. ஆனால், ரஷ்யாவிடம் இருந்து மீட்ட பின் அங்கு எந்த விலங்குகளும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.
அந்த பூங்காவின் சுற்றுப்புறத்தில் ஒட்டகம், பன்றிகள் மற்றும் கங்காருக்களின் உடல் பாகங்கள் மற்றும் எலும்புகள் கிடந்திருக்கின்றன. போர் நடந்த சமயத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் பசியில் வாடிய ரஷ்யப்படையினர் பூங்காவில் இருக்கும் விலங்குகளை கொன்று உண்டு இருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.