போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மடத்துதெரு, உச்சிபிள்ளையார் கோவில்தெரு, கும்பேஸ்வரன்கோவில் தெற்கு வீதி, நாகேஸ்வரன் கோவில் தெற்குவீதி, மகாமககுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரும்பாலான மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிகின்றது. இதனால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.
மேலும் சமீபத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். ஆகவே கும்பகோணம் நகராட்சியினர் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க வேண்டும் என்றும், அதை வளர்ப்பவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.