கிறிஸ்துமஸ் செலவிற்கு கணவன் பணம் தராததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் அருகே உள்ள நல்லம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ரூபாவதி. பாஸ்கர் வாகனத்தில் சென்று மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரூபாவதி தனது கணவரிடம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் வியாபாரம் சரிவர நடக்காததால் தன்னிடம் பணமில்லை என்று கூறி செலவுக்கு பணம் தர மறுத்துள்ளார் பாஸ்கர்.
இதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவருவரும் தூங்க சென்றுள்ளனர். கிறிஸ்துமஸ் செலவிற்கு பணம் இல்லாததால் ரூபாவதி மனவேதனையில் இருந்துள்ளார் . இந்நிலையில் நேற்று காலையில் தூங்கி எழுந்த பாஸ்கர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரூபாவதி விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதனை பார்த்த பாஸ்கர் கதறி அழுதார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரூபாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்