கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஏழுமலை (85) – ராஜம்மாள் (75). ஏழுமலை அம்பத்தூரில் உள்ள ஏரியில் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தார். ராஜம்மாள் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக தம்பதியினர் இருவருமே உடல் நிலை குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். இவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை உறவினர்கள் செய்து வந்தனர் . இந்நிலையில் நேற்று ஏழுமலை திடீரென உயிரிழந்தார்.
இந்த செய்தியை அவரது மனைவி ராஜம்மாளுக்கு நீண்ட நேரத்திற்கு பிறகு உறவினர்கள் கூறியுள்ளனர் . இதனை கேட்ட ராஜம்மாள் படுத்த படுக்கையிலேயே கண்ணீர் மல்க உயிர் துறந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். கணவன் இறந்ததை அறிந்து மனைவியும் உயிர் துறந்த செய்தி அப்பகுதி மக்களிடயே வேகமாக பரவியது. இச்செய்தியை கேட்டு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து முதிய தம்பதியினரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்பு அவர்களது உடல்கள் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.