சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் 16ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. வழக்கமாக நடைதிறக்கும் காலங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு போது 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும். தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.