சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நடை இன்று மாலை நடை திறக்கப்படுகின்றது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகின்ற நிலையில், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதன் பிறகு ஐந்து நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள். அதனால் இன்று ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகின்றது. இன்று மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்க உள்ளார்.
அதன்பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாத காரணத்தால் கோவில் நடை இரவு 7.30 மணிக்கு அடக்கப்பட உள்ளது. நாளை அதிகாலை 5 மணியளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை மற்றும் உச்சி பூஜை ஆகியவை நடைபெற உள்ளன. பின்னர் காலை 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு, 6.30 மணி அளவில் தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு திரும்பவும் நடை மூடப்படும்.
அதே சமயத்தில் வருகின்ற 21 ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க கூடிய விதத்தில், பக்தர்கள் தரிசனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் நெய்யபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.