மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதியன்று மாலை வேளையில் திறக்கப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சபரிமலை கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த நிலையில் மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு சார்த்தப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டு தமிழகம் வழியாக நேற்று பம்பை சென்றடைந்தது.
இதனையடுத்து கொண்டு செல்லப்பட்ட தங்க அங்கியை சபரிமலை தந்திரி மற்றும் மேல்சாந்தி வரவேற்று ஐயப்பனுக்கு சார்த்தி மகாதீபாராதனை நடத்தினர். அப்போது பக்தர்கள் எழுப்பிய சரணகோஷம் சபரிமலை முழுவதிலும் எதிரொலித்தது. இதனிடையில் 41 நாள்கள் மண்டல விரதம் இன்று நிறைவு பெற இருக்கிறது. அதன்பின் ஐயப்பனுக்கு நண்பகல் 11.50 மணியில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குள் மண்டல பூஜை நடத்தப்படுகிறது. இதனைதொடர்ந்து இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. பின் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு மீண்டும் டிசம்பர் 30-ஆம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படவுள்ளது. முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.