கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டு கார்த்திகை மாதமான இன்று பக்தர்கள் முறையாக மாலை அணிவித்து 41 நாள்கள் விரதத்தை தொடங்குகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு பிறகு கோவில் நடை திறக்கப்பட்டு பெண்கள் பலர் சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.
அதன்பிறகு உத்தரவுக்கு எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளதாகவும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சபரிமலை அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தவறாக அச்சிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கேரளா தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் வழிகாட்டு நெறிமுறை புத்தகம் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதுக்கு கீழ், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.