இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் சச்சின் டெண்டுல்கர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்
தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் 2011 உலக கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் கேரி கிறிஸ்டன். இவர் சமீபத்தில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பொழுது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி பற்றியும் சச்சின் டெண்டுல்கர் பற்றியும் தனது நினைவுகளை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சமயம் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்திருந்தார். அதேநேரம் அந்த வருடம் வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றுப் போட்டிகள் உடன் வெளியேறி இருந்தது.
அதற்கு முக்கிய காரணியாக, பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட மாற்றம் சச்சின் பின்னடைவிற்கு காரணமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் பேட்டிங் செய்ய விரும்பும் இடத்தில் களம் இறங்குங்கள் என கூறினேன். அதன் பின்னர் மூன்று ஆண்டுகளில் 19 சர்வதேச சதங்களை அடித்தார். அதில் அவர் அடித்த இரட்டை சதமும் அடங்கும். என்னை பொருத்தவரை நான் செய்தது அவர் செழித்து வளரக்கூடிய சூழலை எளிமை ஆக்குவதுதான். அவரிடம் நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை காரணம் அவருக்கு விளையாட்டு முற்றிலுமாக தெரியும். அதன் காரணமாகவே 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை புரிந்தது என தெரிவித்தார்.