நான் இறந்த பின் ஊக்கை மறுமணம் செய்து கொள் என்று கெஞ்சியது சட்டை பட்டன்.
விளக்கம் :
பெண் என்பவளுக்கு அதிகப்படியான வரைமுறைகள் உண்டு. அவளுக்கு என்று வந்து விட்டால் மட்டும் தராசு ஆண்கள் பக்கமே அதிகம் சாயும். கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறுவது. வெள்ளை புடவை அணிவது, பொட்டு, மஞ்சள், குங்குமம் இல்லாமல் இருப்பது என ஏகப்பட்ட கொடுமைகள் அனுபவித்து வந்தார்கள்.
டிவோர்ஸ் என்றாலே போதும் அவர்கள் மீது நம் பார்வையே வேறு விதமாக இருக்கும். அந்த பாவமான பார்வையே அவர்களின் மீதி வாழ்க்கையை சோதனை ஆக்கிவிடும். ஆண்கள் இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்டால் அது சரி. அதையே ஒரு பெண் செய்தால் அவள் நடத்தை கெட்டவள் என்பதே நம்மில் பலரின் கருத்து.
குழந்தையின்மை காரணமாக எதனையோ பெண்கள் ஒதுக்கப்பட்டு தன் கணவனை வேறு ஒரு பெண்ணுடன் பகிரும் நிலை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். இதே கொடுமை எங்காவது ஆண்களுக்கு நடந்துள்ளதா ? எங்கள் கருத்து தவறாக இருந்தால் நீங்கள் நிச்சயம் திருத்தலாம். ஒருவர் இல்லை என்றால் இன்னொருவர் என்ற நியாயம் அனைவருக்கும் இங்கு பொருந்தும்.
இறக்கும் தருவாயில் இருக்கும் மனைவிமார்கள் கணவனுக்கு ஒரு நல்ல துணை அமைய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே கண் மூடுவார்கள். இது படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் உண்டு . தனக்கான துணையைத் தேடிக் கொள்வதில் ஆண்களைப் போல பெண்களுக்கும் முழு சுதந்திரம் உண்டு என்பதே எங்கள் கருத்து.
தம்பதிகள் பிரிந்தால் அல்லது இருவரில் ஒருவர் இறந்தால் மற்றொருவர் நிலை என்னவாக இருக்கும் என்ற எண்ணமே மேற்கண்ட வரிகளின் அடித்தளம்(“நான் இறந்த பிறகு ஊக்கினை திருமணம் செய்து கொள்”என்று கெஞ்சியது பட்டன்[ஆண் அல்லது பெண்]). ஆணும் பெண்ணும் சரி சமம் என்று பேச்சிலோ சிந்தனையிலோ இருந்தால் போதாது செயலிலும் வேண்டும்.